கலவரம் பாதித்த மணிப்பூரில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் சுமார் 350 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி ஆர்.கே.ரஞ்சன் கூறுகையில், மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பிலும் நடந்து வருகிற மோதல்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போலீஸ் நிலையங்களில் இருந்து கலவரக்காரர்கள் ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்று தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதங்களைத் தேடும் பணி நடக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் 53 ஆயுதங்களும், 39 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. கலவரத்தால் 50 ஆயிரத்து 698 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.