தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதை அரசு போக்குவரத்து கழகம் வழக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறையில் உள்ளனர். மேலும், தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து நாளை கூடுதலாக 300 பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் 21-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வழக்கமாக சென்னையை பொறுத்தவரை தினம்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.