சென்னை - பெங்களூரு வழித்தடத்தில், ரயில் பாதைகள் ஒட்டி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நாட்டின் பல்வேறு வழித்தடங்களிலும், ரயில் பாதைகளை மேம்படுத்துவதால், ரயில்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம். தெற்கு ரயில்வே சார்பில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் - பெங்களூரு – மைசூருக்கு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை வரும் 11 ஆம் தேதி முதல் துவக்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்த தடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையற்ற நுழைவுகளை மூடி, சுரங்கப்பாதை அல்லது மேம்பாலங்களை அமைத்துள்ளோம். அதேபோல ஆடு, மாடுகள் ரயில் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைத்து வருகிறோம்.
சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் 60 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளோம். எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய உள்ளோம் என்று அவர்கள் கூறினர்.














