வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியாக உயர்ந்ததால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பெரிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி ஆகும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மழையால் தேனி முல்லையாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் வைகை அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி வைகை அணையிலிருந்து, நேற்று வினாடிக்கு 7000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இன்று நீரின் அளவு 7500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கூடுதலான நீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் இருக்க பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.