சென்னையில் உள்ள சாலைகளை பராமரிக்க 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்துகள் செல்லும் சாலைகளும், 5, 270 கி.மீ. நீளமுள்ள 34, 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.
இதை சரிசெய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவுக்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.