ஸ்னாப்சாட் செயலியில், குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலான புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பதின் பருவக் குழந்தைகளின் சமூகப் பக்கங்களுக்கு, பெற்றோரின் கவனம் அவசியம் என்ற கருத்தியல் உலக அளவில் வலுவடைந்து வருவதால், சமீப காலமாக, இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்களில், குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது, ஸ்னாப் சாட் செயலியில் ஃபேமிலி சென்டர் (Family Center) என்ற புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கண்காணிக்க முடியும். தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களைப் பெற்றோரால் பார்க்க முடியும். அதே சமயத்தில், குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நண்பர்களுடனான சாட் (chat) விவரங்களைப் பெற்றோரால் பார்க்க இயலாது. முதலில் ஃபேமிலி சென்டர் அம்சத்தில் சேர குழந்தைகளுக்கு பெற்றோர் அழைப்பு விடுக்க வேண்டும். அதனை ஏற்ற பின்னர், குழந்தைகளும் பெற்றோரும் இந்த ஃபேமிலி சென்டர் பக்கத்தில் இணைந்திருப்பர். அதன் பின்னர், குழந்தைகளின் நட்பு வட்டாரத்தைப் பெற்றோர்கள் பார்க்க இயலும். அத்துடன், கடந்த ஒரு வாரத்தில் யார் யாருடன் குழந்தைகள் தொடர்பு கொண்டார்கள் என்ற விவரத்தையும் பார்க்க இயலும். மேலும், பெற்றோர்கள் தங்களுக்கான சமூகப் பக்கத்தில் என்ன பார்க்கிறார்கள் என்ற அறிக்கை குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். குழந்தைகளின் தொடர்பில் சந்தேகப்படக்கூடிய நபர்கள் இருந்தால் பெற்றோர்கள் அதனை நேரடியாக அறிவிக்க முடியும். மேலும், குழந்தைகளுக்கு ஏதாவது சீண்டல்கள் நேர்ந்தால், அதனைப் பெற்றோர்கள் உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். தற்போதைய நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த அம்சம் வெளிவந்துள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது