அடுத்த 5 ஆண்டுகளில், கிராமங்களில் சுமார் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில், இன்னும் இச்சங்கங்கள் தொடங்கப்படாத கிராமங்களிலும், பஞ்சாயத்துகளிலும் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் பால்வள கூட்டுறவு அமைப்புகள், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதும், கீழ்மட்டம் வரை அதை கொண்டு செல்வதும் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இவை விவசாயிகள் தங்கள் வருவாயை பெருக்கிக்கொள்ள பயன்படும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை பெருக்கவும் உதவும்.