இன்றைய பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்றத்துடன் இருந்தாலும், இறுதியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அத்துடன், இன்று மதியம் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 897.28 புள்ளிகள் சரிந்து, 58237.85 ஆக பதிவானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 258.6 புள்ளிகள் சரிந்து, 17154.3 ஆக நிலை பெற்றது. இன்றைய வர்த்தகத்தில், வங்கித் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக இழப்புகளை பதிவு செய்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆன காரணத்தால், இந்திய பங்குச் சந்தையில் வங்கித் துறை கடும் நெருக்கடியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் 2.87% இழப்பையும், தனியார் துறை வங்கிகள் 2.44% இழப்பையும் பதிவு செய்துள்ளன. அதே வேளையில், நிஃப்டி வங்கி 2.27% இழப்பை பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக, இண்டஸ் இண்ட் வங்கி 7.33% இழப்பை பதிவு செய்து மிகவும் சரிவில் உள்ளது. வங்கிகள் தவிர, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.














