இந்தியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு தொடரான ஐபிஎல் -ன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராக ஜியோ சினிமா உள்ளது. தற்போது, ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 5 வாரங்கள் ஆன நிலையில், 1300 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளதாக ஜியோ சினிமா தெரிவித்துள்ளது. மேலும், சராசரியாக, ஒரு நபர், ஒரு விளையாட்டு போட்டியில், 60 நிமிடங்கள் பார்த்துள்ளார் என ஜியோ சினிமா கூறியுள்ளது. இது டிஜிட்டல் விளையாட்டு போட்டிகள் துறையில், சர்வதேச அளவில், மிக முக்கிய மைல்கல் என சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், தொடர்ந்து இந்த துறையில் பல உலக சாதனைகளை நிகழ்த்த உள்ளதாக ஜியோ சினிமா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வயாகாம் 18 நிறுவனம் ஜியோ உடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது. தற்போது, ஒவ்வொரு வாரமும் ஜியோ சினிமா வலுவடைந்து வருவதாக வயாகாம் 18 நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தலைமை செயல் அதிகாரி அணில் ஜெயராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், உச்சபட்சமாக 2.23 கோடி பார்வைகள் பதிவானது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 17ஆம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில், 2.4 கோடி பார்வைகள் பதிவாகி, புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது.














