நிகழும் 2023 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஜிடிபி 3.75 ட்ரில்லியன் டாலர்களை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை உறுதி செய்துள்ளார். முன்னதாக, 2014 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஜிடிபி 2 ட்ரில்லியன் டாலர்களாக இருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்தியா ஒளிமயமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 11வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
பொருளாதார அடிப்படையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது, ஐந்தாம் இடத்தில் இந்தியாவும், ஆறாம் இடத்தில் பிரிட்டனும் உள்ளன. மேலும், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2023 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆகும். முன்னதாக, இது 7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.