பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் பகுதியில் நீலம் ஜீலம் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நீர் மின் நிலையம் மூலம், 1500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 508 பில்லியன் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நீர் மின் நிலையத்தின், 3 1/2 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய குகைப் பாதை ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக, கடந்த ஜூலை மாதம் முதல், இங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நீர் மின் நிலைய கட்டமைப்பில் சீனாவை சேர்ந்த Gezhouba குழுமத்தின் CGGC-CMEC நிறுவனம் ஈடுபட்டிருந்தது. எனவே, பழுது நேர்ந்த பொழுது, அதை சரி செய்ய நிறுவனம் முன்வந்தது. அதற்காக, 120 மில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை வட்டி இல்லா கட்டணமாக கேட்டிருந்தது. அத்துடன், பழுதுகளை முழுமையாக நீக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் தேவைப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப், சீன நிறுவனத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய, உலகின் பல பகுதிகளில் இருந்து வேலையாட்களை நியமிக்க ஜூலை 13ஆம் தேதி உத்தரவிட்டார்.
பாகிஸ்தானில் எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவை உச்சகட்டமாக இருந்த ஜூலை மாதத்தில், இந்த நீர் மின் நிலையம் நிறுத்தப்பட்டதால் அந்நாட்டிற்கு பெரும் இழப்பு நேரிட்டது. இதற்கு சீன நிறுவனத்தின் தகுதி இல்லா கட்டமைப்பே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதே வேளையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து உரிய நேரத்தில் கட்டணங்கள் தரப்படவில்லை என்று சீன நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனால், இரு தரப்புக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அத்துடன், அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள், இந்த நீர்மின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு, உள்ளூர்வாசிகளுக்கு வேலையின்மை, நீர் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முறையாக பாகுபாடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் பொழுது, சீன அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பாகிஸ்தான் காவல்துறையின் மீது சீனா குற்றம் சாட்டுகிறது. மேலும், பழுதை சரி செய்யும் வேலையையும் பாதியிலேயே சீனா நிறுத்திவிட்டது.
சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த நீர்மின் நிலையம், மிகப்பெரிய திட்டமாகும். இதைப் போலவே, தாசு, மொஹமத் மின் நிலையங்களும், இரு நாடுகளின் கூட்டமைப்பில் உருவாகின்றன. எனவே, தற்போதைய பிரச்சனையால் அந்தத் திட்டங்களும் கேள்வி குறியாகி உள்ளன.