இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றி மூலம், நிலவின் தென்துருவத்திற்கு அருகே லேண்டரை தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்துள்ளது. மேலும், நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய 4வது உலக நாடாக பட்டியலில் இணைந்துள்ளது.
இன்று மாலை சரியாக 6:04 மணிக்கு, சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மென்மையாக நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் விண்கலம் நிலவை எட்டியவுடன், இஸ்ரோ தலைவர் சோம்நாத் "இந்தியா இப்போது நிலவில்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான் 3 விண்கலம், எதிர்பார்த்தபடி பயணித்து, கணிக்கப்பட்ட நேரத்தில் நிலவில் கால் பதித்துள்ளதாக திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிலவை சென்றடைந்த லேண்டர் "நான் என் இருப்பிடத்தை அடைந்து விட்டேன்" என செய்தி அனுப்பியுள்ளது. திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.














