டாடா குழுமத்தை சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக இன்று 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் மிகப்பெரிய சச்சரவை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், ஊழியர்களை சமமாக நடத்துவதில்லை என நிறுவனத்தின் ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், கடந்த செவ்வாய் கிழமை முதல், நிறுவனத்தின் ஊழியர்கள் நோய் விடுப்பு எடுத்து பணிக்கு வராமல் உள்ளனர். இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பெரும்பாலும் ரத்தாகியுள்ளது. எனவே, விமான நிறுவனம் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அவர்களது பணம் திருப்பி தரப்படும் அல்லது வேறு நாளில் சேவை மாற்றி அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி விடுப்பு எடுத்துள்ள ஊழியர்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடத்தி, சிக்கலுக்கு தீர்வு காண தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.