உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள அதிபர் புதின் தயாராக இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைனில் மோதல் நடைபெற்று வரும் பகுதிகளில் போர் நிறுத்தம் மேற்கொள்ள புதின் தயாராக இருப்பதாக நான்கு ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் முற்றிலுமாக தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த புதின் ஒப்புக் கொள்வார் என்று மேலும் அவர்கள் கூறினர். தற்போது உக்ரைனிடம் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது. இந்த தாக்குதலின் நோக்கம் புதிய பகுதிகளை கைப்பற்றுவது அல்ல என்றும் உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவே இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில மேலை நாடுகள் தடுப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கருதுகிறார். இது குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். உக்ரைன் போர் நிறுத்தத்தை விரும்பாதவரை ரஷ்யா தாக்குதல் நடத்தும் என தெரிகிறது. பெரிய படையை கொண்டு போரிடும் எண்ணம் புதினுக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.














