மாருதி சுசுகி நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் குறைபாடு நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. எனவே, சுமார் 10,000 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. வேகன் ஆர், செலிரியோ, இக்நிஸ் ஆகிய மூன்று மாடல்களை சேர்ந்த 9925 கார்களை திரும்பப் பெறுவதாக, மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று ஆவணத்தில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் ரியர் பிரேக் அமைப்பில் குறைபாடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த பாகங்கள் உடையலாம் அல்லது விசித்திரமான ஒலியை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. அத்துடன், நீண்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு வாகனங்களின் பிரேக்கிங் செயல்பாடுகள் போதிய திறன் இல்லாமல் போகும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற நிறுவனம் முடிவு செய்துள்ளது”. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டிருந்தால், அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, குறைபாடுகளைச் சரி செய்ய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மற்றும் செலிரியோ ரக வாகனங்கள் இந்தியச் சந்தையில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.