அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று பல பரபரப்பான ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீரர் நிஷேஷ் பசவரெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக்குடன் மோதினார். தொடக்கத்திலிருந்தே தன்னம்பிக்கையுடன் விளையாடிய பசவரெட்டி 7-6, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் ஜெர்மனியின் ஸ்வெரெவ் எதிராக ஆடவுள்ளார்.
மற்ற ஆண்கள் ஆட்டங்களில், டாமிர் டூம்ஹூர் (போஸ்னியா), வாலண்டைன் ராயர் (பிரான்ஸ்), லெர்னர் டியென் (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி, ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவை 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில், கொலம்பியாவின் கமிலா ஒசோரியோ 7-5, 1-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தன் இடத்தை உறுதி செய்தார்.