திருப்பரங்குன்றம் சமணர் படுகையில் 2200 ஆண்டு பழமையான புதிய தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த 2 குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுகைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு சமணர் படுகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுகைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.
இதனை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.