அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 820 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 11.63 கோடி நஷ்டமாக பதிவானது குறிப்பிடத்தக்கது. மேலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்க வருவாய் 42% உயர்ந்து, 26612.23 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் EBITDA மதிப்பு வருடாந்திர அடிப்படையில் இரட்டிப்பாக உயர்ந்து 1968 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி, “தற்போதைய சந்தை நிலவரம் தற்காலிகமானதே. மீண்டும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவோம்” என்று கூறியுள்ளார். மேலும், நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வள மேலாண்மை வர்த்தகம் 38% உயர்ந்து, 17595 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் சுரங்க வர்த்தகம் 3 மடங்கு உயர்ந்து, 2044 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாக்க எரிசக்தி வர்த்தக வருவாய் மற்றும் விமான நிலைய வர்த்தக வருவாய் ஆகியவை இரட்டிப்பாகி, 1427.4 கோடியாகவும், 1733 கோடியாகவும் பதிவாகியுள்ளது.