அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 120 பில்லியன் டாலர்களுக்கும் மேல் சரிந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பின் பாதியளவு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த சந்தை மதிப்பு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதிலிருந்து, அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக சரியத் தொடங்கின. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 15-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும், அவரது அசுர வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்ற விமர்சனம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, தனது பங்கு விற்பனையை நிறுத்துவதாக கௌதம் அதானி நேற்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, அதானி நிறுவன பங்குகள் 20% வீழ்ச்சியுடன் இருந்தன. மேலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய அதானி குழும நிறுவனங்களை சிறப்பு கண்காணிப்பில் அமர்த்துவதற்காக தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது.