அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் சரியத் தொடங்கியது. அன்றைய தினம் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமத்தின் மீது முறைகேடுகளை சுமத்தியதால் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, அதானி குழும பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. அதுவும் இரண்டே நாட்களில், 31.2% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம், அதானி நிறுவனப் பங்குகள் 14% உயர்ந்த நிலையில், இன்று மேலும் 15% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், ஒரு பங்கு விலை 1567 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனாலும், தொடர்ந்து தனது ஒரு வருட குறைவான பங்கு மதிப்பை நிறுவனம் கொண்டுள்ளது. அதே வேளையில், நேற்று அதானி குழுமத்தின் 8 நிறுவனங்கள் உயர்வை பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய தினம் அதானி குழுமத்தின் அனைத்து 10 நிறுவனங்களும் உயர்வை பதிவு செய்துள்ளன. தொடர்ச்சியாக அதானி பங்குகள் ஏற்றம் கண்டு வருவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, அதானி குழுமம் கடன்களை அடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.














