ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ். தென்னரசு (65), 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பினை வகித்துள்ளார்.