உத்திரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராளுமன்ற தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ் 2000,2004, 2009 ஆகிய ஆண்டுகளில் கண்ணூஜ் தொகுதியில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 2012 இல் முதலமைச்சரான பிறகு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். மேலும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதியிலும் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் 2019-ல் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதிக்கு மே 13ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கண்ணூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் நாளை தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து 80 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 17 இடங்கள் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.