பாகிஸ்தானில் பொருளாதார வழித்தட திட்டங்களில் ஈடுபடும் அனைத்து சீன தொழிலாளர்களும் குண்டு துளைக்காத கார்களில் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, பாகிஸ்தானில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) சார்ந்த திட்டங்களில் பணிபுரியும் சீனப் பிரஜைகள் புல்லட் புரூப் வாகனங்களைப் பயன்படுத்த பாகிஸ்தானும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த CPEC திட்டம் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள கஷ்கரிலிருந்து ருடன் அரபிக்கடலில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை செயல்படுத்தப்படும். 60 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டமானது சீனாவின் லட்சியமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (பிஆர்ஐ) ஒரு பகுதியாகும். இது ஜனாதிபதி ஜி ஜின்பிங் வகுத்த திட்டமாகும்.
சீன தொழிலாளர்களின் பாதுகாப்பு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளது. எனவே 11வது கூட்டு ஒத்துழைப்புக் குழுவின் ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் சட்ட அமலாக்க துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் திறன்களை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். "திட்டங்களில் பணிபுரியும் சீனர்களின் அனைத்து வெளிப்புற நடமாட்டங்களுக்கும் குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று வரைவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீபுடன் சீன அதிபர் முன்பே பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
அதோடு சீன தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால், சீனா தனது பாதுகாப்புப் பணியாளர்களை சீன நாட்டினரைப் பாதுகாக்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.