பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது. இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானிய அரசை மின் கட்டண உயர்வை அமல்படுத்தும்படி ஐ.எம்.எப். வலியுறுத்தியது. இதனால், கூடுதலான மானிய தொகையான 33,500 கோடி பாகிஸ்தான் கரன்சி மதிப்பிலான தொகையை ஈடுகட்ட முடியும். இந்த, மின் கட்டண அதிகரிப்பானது, பணபற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் மின் துறையின் இழப்பை குறைக்கும் என கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் வருகிற அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சுட்டி காட்டி இந்த நடைமுறையை அமல்படுத்த பிரதமர் ஷெபாஸ் மறுத்து விட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ஐ.எம்.எப். இடையே சுமூக ஒப்பந்தம் எட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்காக ஐ.எம்.எப். குழு ஒன்று பாகிஸ்தானில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. எனினும், இந்த சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை என்றும், அதில் பல்வேறு தவறுகளுக்கான நோக்கங்கள் உள்ளன என்றும் தொழில்நுட்ப ரீதியிலான விவாதத்தின்போது, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பெற கூடிய நிதி உதவி அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய் சேருகிறது என ஐ.எம்.எப். குறிப்பிட்டு உள்ளது. தொடர்ந்து அதன் எதிரொலியாக அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.














