சென்னையில் நடத்தப்படும் சர்வதேச புத்தக கண்காட்சி செலவுக்கு 6 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், தமிழக அரசு சார்பில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி வரும் 16ம் தேதி முதல் 18 வரை மூன்று நாட்கள் சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், இலக்கியவாதிகள் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்ற உள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த கண்காட்சிக்கு சர்வதேச தரத்திலான நிகழ்ச்சிகள், பார்வையாளர் மாடம், புத்தக கண்காட்சிகள், வரவேற்பு, உபசரிப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான செலவுக்கு தமிழக பாடநுால் கழகத்தில் இருந்து 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.