அமரராஜா குழுமத்தை சேர்ந்த அமரராஜா இன்ஃப்ரா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம், வங்கதேசத்தில் 130 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சூரிய மின்சக்தி திட்டத்தை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம், சூரிய மின்சக்தி துறையில் சர்வதேச அளவில் அமரராஜா நிறுவனம் கால் பதித்துள்ளது. இந்த செய்தி வெளியான பின்னர், அமரராஜா நிறுவனத்தின் பங்குகள் மிகவும் ஏற்றமடைந்து வர்த்தகமாகி வருகின்றன.
அமரராஜா குழுமத்தின் வரலாற்றில் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய ஒப்பந்தமாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விக்ரமாதித்யா கௌரிநேனி, "கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் மிகப்பெரிய புத்தாக்க எரிசக்தி திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வந்தோம். தற்போது, முதல் முறையாக, சர்வதேச அளவில் புத்தாக்க எரிசக்தி துறையில் கால் பதித்துள்ளோம். இந்த முறை, 100 மெகாவாட் திறனில் வங்கதேசத்தில் சூரிய எரிசக்தி திட்டத்தை துவக்க உள்ளோம். தொடர்ந்து, ஒரு ஜிகாவாட் அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.