அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து, 11 நாட்கள் கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. நேற்று இந்த ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரு நாடுகளும் இணைந்து, நீண்ட நாட்களுக்கு ஒத்திகை நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இரு நாடுகளும் ராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதை வடகொரியா எதிர்த்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய வகையிலான ஏவுகணையை சோதனை செய்து எதிர்ப்பை அறிவித்துள்ளது. ஆனால், திட்டமிட்டபடி ராணுவ ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950 ஆம் ஆண்டு போர் மூண்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், தாக்குதலை கைவிடுவதாக இரு நாடுகளும் ஒப்பந்தமிட்டுள்ளன. ஆனாலும், நிரந்தரமாக போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்காவுடனான கூட்டுப் பயிற்சி, தங்கள் மீதான தாக்குதல் முன்னெடுப்பு என்று வடகொரியா கருதுவதால், கொரிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.














