அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு உலகில் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், புதிது புதிதாக வைரஸ் உருமாற்றமும் நேர்ந்து கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களும், அதற்கு ஏற்றவாறு தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு நாடுகளின் அரசாங்கமும் மக்களை அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அரசு, மக்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் 12 வயது நிரம்பிய அனைவருக்கும் ஆண்டு தோறும் ஒரு டோஸ் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக, புதிய தடுப்பூசி முறை தொடங்கப்படுகிறது. உருமாறி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்றவாறு, இந்த பூஸ்டர் தடுப்பூசிகள் புதுப்பிக்கப்பட்டு செலுத்தப்படும். இது முற்றிலும் பாதுகாப்பானது. வருடா வருடம் அமெரிக்கர்கள் போட்டுக் கொள்ளும் காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே, இந்த கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த கொரோனா தடுப்பூசியை, தொழிலாளர் தினத்துக்கும் அக்டோபர் மாதத்தில் வரும் ஹாலோவீன் தினத்துக்கும் இடையில் பொதுமக்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசி, பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களால் கூட்டாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.