குஜராத்தை சேர்ந்த கூட்டுறவு பால் நிறுவனமான அமுல், தனது பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், இந்த விலை ஏற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பால் விலை ஏற்றம் அறிவிப்புக்கு பின்னர், அமுல் கோல்ட் விலை லிட்டருக்கு 66 ரூபாயாக உள்ளது. அமுல் தாசா 54 ரூபாய்க்கும், அமுல் மாட்டு பால் 56 ரூபாய்க்கும், அமுல் ஏ2 எருமைப்பால் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில், அமுல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ச்சியாக பால் விலை உயர்த்தப்படுவது கவனம் பெற்றுள்ளது. ஆனால், நிறுவனத்தின் இயக்கச் செலவுகள் மற்றும் பால் உற்பத்தி செலவுகள் உயர்ந்துள்ளதால் விலைகள் உயர்த்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “மாடுகளுக்கு வழங்கப்படும் உணவு விலை மட்டுமே கடந்த ஆண்டு 20% உயர்ந்துள்ளது. அத்துடன், நிறுவனத்தில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கான செலவுகளும் 8 - 9% உயர்ந்துள்ளது. எனவே, பால் விலை உயர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














