புதுடெல்லி, ஏப்ரல் 27, 2022:
ஒருங்கிணைந்த வணிக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான லுமினோர், சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அப்பார் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணையப் போவதாக அறிவித்துள்ளது. ஆசியா பசிபிக் பகுதியில் கல்விசார் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லுமினோர் நிறுவனத்தின் உயர் அதிகாரி நரேன் விஜய், “லுமினோர் நிறுவனம் பல்வேறு தளங்களில் மிகுந்த நிபுணத்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பார் டெக்னாலஜிஸ் உடனான இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து, அபரித வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறினார். லுமினோர் நிறுவனம், பகுப்பாய்வை எளிமையாகவும் வலுவாகவும் செயல்படுத்த, செயற்கை நுண்ணறிவுடன் பணியாற்றும் எனவும், அப்பார் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதற்கானத் தொழில்நுட்ப உதவிகள், சேவைகள், தரவுகள், வர்த்தக மாறுதல்கள் ஆகியவற்றை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக லுமினோர் நிறுவனம், அப்பார் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு அதற்கான காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. லுமினோர் நிறுவனம், இந்த வருடம் 10000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. கல்விசார் துறையில் இந்த இலக்கை அடைய அப்பார் டெக்னாலஜிஸ் உதவும் என்று அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் சுமித் சுக்லா தெரிவித்துள்ளார்.














