கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் ஈவென்டில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கட்ட தயாரிப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஐபோன் 14 வகையில் நான்கு கைபேசிகளும், ஆப்பிள் வாட்ச் வகையில் இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும், A16 பயோனிக் சிப் மற்றும் ஏர்பாட் புரோ ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில், A15 பயோனிக் சிப்பில் இயங்கும் ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் ஆகிய கைபேசிகளின் அறிமுகம் முக்கியமாக இருந்தது. வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க சந்தையில் வெளியாகவிருக்கும் இந்த போன்களில், அவசர நேரங்களில் செயற்கைக்கோள் இணைப்பு மூலம் பயனர்கள் இணைந்திருக்கும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், 5ஜி தொழில்நுட்பத்துடன் 12 மெகா பிக்சல் கேமரா அம்சம் இதில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில், ஐபோன் 14 மாடலின் விலை 63639 ரூபாயாகவும், 14 பிளஸ் மாடலின் விலை 71604 ரூபாயாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள A16 பயோனிக் சிப்பில் இயங்கும் வகையில், ஐபோன் 14 புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகிய கைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய ரூபாய் மதிப்பில், ஐபோன் 14 புரோ மாடலின் விலை 73565 ரூபாயாகவும், புரோ மேக்ஸ் மாடலின் விலை 87530 ரூபாயாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் நாட்ச் டிஸ்பிளே புதுமையாக இடம்பெற்றுள்ளது. மேலும், 48 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமரா வசதி இதன் தனிச் சிறப்பாகும்.
அத்துடன், ஸ்மார்ட் வாட்ச்களின் பொதுவான அம்சங்களுடன் சேர்த்து, பெண்களின் மாதவிடாய் சுழற்சி குறித்த தகவலை சேமிக்கும் சிறப்பு அம்சங்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வாட்சில், மேம்படுத்தப்பட்ட பேட்டரி வசதி, ஜிபிஎஸ் வசதி போன்ற சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், நீச்சல் மற்றும் பிற விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில், ‘ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா’ அறிமுகம் செய்யப்பட்டது. இதனை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்பாட் மூலம், ஒரு முறை சார்ஜ் செய்தால், தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை இசை கேட்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 36 மணி நேர நீண்ட பேட்டரி திறன் கொண்ட இந்த வாட்ச் அனைவருக்கும் உகந்தது என்று கூறப்பட்டது.