ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த கிரெடிட் கார்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியா வந்திருந்த போது, இதற்கான பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி வங்கி உடன் இணைந்து இந்த கிரெடிட் கார்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பொருட்டு, எச்டிஎப்சி வங்கி தலைமை செயல் அதிகாரி சசிதர் ஜெகதீசன் உடன் டிம் குக் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆப்பிள் நிறுவனம் கிரெடிட் கார்டு வெளியீடு தொடர்பாக விவாதித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
கிரெடிட் கார்டு தவிர, ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப்பிள் பே’ கட்டண முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம், என் பி சி ஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில், மாஸ்டர் கார்டு மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் உடன் இணைந்து, பிரத்தியேக டைட்டானியம் கார்டை ஆப்பிள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.