ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 1400 பள்ளிப் பேருந்துகளை வழங்கும் மெகா ஆர்டரைக் கைப்பற்றியுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் நான்காவது பெரிய பேருந்து உற்பத்தியாளரான அசோக் லேலண்ட், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தில் இருந்து, 1400 பள்ளி பேருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கும் புதிய ஆர்டர் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் இயங்கும் அசோக் லேலண்ட் மற்றும் அமீரகத்தில் உள்ள சுவைதான் டிரேடிங் அல் நபூதா குழுமம் ஆகியவை இணைந்து இந்த ஆர்டரைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 பேருந்துகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ராஸ் அல் கைமா பேருந்து உற்பத்தி நிலையத்தில் இருந்து, இந்தத் திட்டத்திற்கான பேருந்துகள் தயார் செய்யப்பட உள்ளன. சுமார் 55% கட்டமைப்பு பொருட்கள் அமீரகத்தில் இருந்து பெறப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, முழுக்க முழுக்க அமீரகத்திலேயே திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, இந்த பேருந்துகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதால், இந்த திட்டத்தை "The Emirati Bus; - Made in UAE for the GCC" என்று ஹிந்துஜா குழுமம் அழைக்கிறது. இந்த ஆர்டரின் பெயரில், 55 இருக்கைகள் கொண்ட பால்கான் பேருந்து மற்றும் 32 இருக்கைகள் கொண்ட ஆயிஸ்டர் பேருந்து ஆகியவை இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதனை வரலாற்று நிகழ்வாகக் குறிப்பிட்ட தீரஜ் ஹிந்துஜா, "பள்ளி மாணவர்களைப் பத்திரமாகக் கொண்டு செல்வதற்கு எங்கள் நிறுவனத்தின் பேருந்துகள் தகுதியானவை என்ற வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறியுள்ளார். இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கானத் தலைவர் அமன் தீப் சிங் பேசுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் எங்கள் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இங்கே நிரம்ப உள்ளன” என்று கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இத்தனைப் பெரிய அளவில் பேருந்துகள் உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்று ஹிந்துஜா குழுமம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்திற்கான மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.














