ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், நேற்று ராணுவ ஆட்சி எதிர்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், எண்ணற்றவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. குழந்தைகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ள இந்த தாக்குதலுக்கு, மியான்மர் ராணுவம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் எதிர்ப்பு அமைப்பின் அலுவலகம் ஒன்று, சாஜிங் பகுதியில் காலை 8 மணி அளவில் திறக்கப்பட இருந்தது. அப்போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ‘ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் முடக்கப்படுவார்கள்’ என்று ராணுவம் எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.