மொசாம்பிக் பகுதியில் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 94 பேர் பலியாகியுள்ளனர்.
தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடு மொசாம்பிக். இங்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 94 பேர் பலியாகியுள்ளனர். அந்த படகு அந்நாட்டின் நம்புலா மாகாணத்தில் இருந்து மொசாம்பிக் தீவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கவிழ்த்து விபத்துக்குள்ளானது. அது சுமார் 130 பேரை ஏற்றி சென்றது. இந்த விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பலர் மாயம் ஆகிவிட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகில் அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காலரா பற்றி தவறான தகவல் பரவியதை அடுத்து அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர் என்று தெரிய வந்துள்ளது.