அண்மைக்காலமாக, செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, அந்த வழித்தடத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்தை பல்வேறு கப்பல் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரானின் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களால் ஹமாஸ் அமைப்பினருக்கு எந்த பலனும் இல்லை; ஆனால், ஏமனில் தங்களுக்கான ஆதரவை பெருக்கும் நோக்கத்துடன் ஹுதி கிளர்ச்சி படையினர் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இதனால், பல்வேறு கப்பல்கள் சேதம் அடைந்துள்ளன. எனவே, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கப்பல் நிறுவனங்கள், செங்கடல் வழித்தடத்தில் செல்லும் தங்கள் சரக்கு கப்பல்களை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளன.