ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, 8-ந்தேதி ஹோலி பண்டிகை தினத்தில் அவர் குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வருகை தருகிறார். அதன்பின்னர் 9-ந்தேதி மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவின் கீழான ஒத்துழைப்பு பற்றிய வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர, பரஸ்பர நலன் சார்ந்த, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அல்பானீஸ் சந்தித்து பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.