சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க உள்ளது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு தரப்பில் கூறப்படுவதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிநவீன பேட்டரிகள், இரும்பு உருக்கு, மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள், மருத்துவ உபகரணங்கள், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த இறக்குமதி வரி படிப்படியாக உயர்த்தப்படும். நடப்பாண்டிலேயே இந்த திட்டம் அமலாக்கம் செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு எதிரான வர்த்தக கொள்கைகளை சீனா பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய பதவி காலத்தில் கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். தற்போது அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் பைடனுடன் மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுப்பது என்பது தொடர்பான போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டு பொருள்கள் மீது பைடன் கூடுதல் வரிகளை விதிக்கிறார் என்று கூறப்படுகிறது.