சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக ஹண்டர் பிடென் மீது உள்ள குற்றச்சாட்டு உறுதியானால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பிடென் போதை பொருள் பழக்கத்தை மறைத்து துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள், போதை பொருள் பயன்படுத்துபவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் துப்பாக்கி வாங்குவதற்காக போதை பொருள் பழக்கம் கிடையாது என்று பொய்யாக அவர் கூறியுள்ளார். எனவே அவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஜோ பிடென் கூறுகையில், இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்வேன். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் எனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு பொது மன்னிப்பு அளிக்க மாட்டேன் என்றார். இந்த வழக்கு விவகாரத்தில் ஹண்டர் பிடெனுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.