தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில், பாஜக தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த புதிய தலைவர்களின் நியமனம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு, பண்டி சஞ்சய் குமாருக்கு பதிலாக, எம் பி ஜி கிஷன் ரெட்டி பாஜக கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான தெலுங்கானா மாநில தேர்தல் நிர்வாகக் குழுவின் தலைவராக எடெலா ராஜேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், ஆந்திர மாநிலத்தின் பாஜக கட்சி தலைவராக, என் டி ராமராவ் மகள் டகுபதி புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாப் மாநிலத்தில் எம் பி சுனில் குமார் ஜகார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பாபுலால் மராண்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாஜக கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் செயலர்கள் பங்குபெறும் மாபெரும் கூட்டம் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.