கோவையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து பல பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவையில் சுமார் 50,000 சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கிரைண்டர், மிக்ஸி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உட்பட்ட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்க கூடிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்களின் விலை, பொருளாதார மந்த நிலை ஆகிய பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை திரும்ப பெற கோரி கோவையில் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை அமைச்சர்களை சந்தித்து பேசினாலும் இதற்கு ஒரு தீர்வு காணப்படாத நிலையில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. மேலும் அங்கு பணிபுரிபவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். தமிழகம் முழுவதும் இன்று கருப்பு கொடியேற்று போராட்டம் நடைபெற்றது.














