வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தொடங்கப்பட்டது. பின்னர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30992 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2,20,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 600 கோடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட இருக்கிறது