அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ், அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர், மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டார். அப்போது அவருக்கு அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார்.
இத்திட்டத்தை ரூ.33.56 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படவுள்ளது.