பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கணினிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, விமான சேவைகளை இயக்குவதில் பாதிப்பு நேர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக, விமானத்தின் சிறிய தூர பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெரும்பான்மையான உள்நாட்டு மற்றும் சிறிய தூர விமானங்களை இயக்குகிறது. நேற்று, நிறுவனத்தின் கணினிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் நடத்தப்பட்ட தொடர் முயற்சிகளில், பெரும்பான்மையான சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, இன்று சிறிய தூர விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் படி, நேற்று 128 விமான சேவைகளும், இன்று 35 விமான சேவைகளும் ரத்தாகி உள்ளன. ஐரோப்பாவை பொறுத்தவரை, வரும் திங்கட்கிழமை விடுமுறை என்பதால், இந்த வார இறுதியில் ஏகப்பட்ட விமான சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.














