அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 255 ஆக பதிவாகி இருந்தது. எனவே, சர்வதேச நாணய நிதியம், கரன்சி மதிப்பு மீதான கட்டுப்பாட்டை நீக்கக்கோரி பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சந்தை நிலவரத்திற்கேற்ப ரூபாய் மதிப்பை கணக்கிட வழிவகை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் மிகவும் குறைவாக உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக அங்கு கடும் உணவு பணவீக்கம் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில், கோதுமை மாவின் விலை 3000 ரூபாய் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அனைவரும் குறைந்த விலையில் கொடுக்கப்பட்ட மாவுக்காக சண்டையிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பகிரப்பட்டது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களை 24 வருட உச்சமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.