விலைவாசி உயர்வை மேலும் குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நடப்பு 2022 - 2023 நிதியாண்டுக்கான ரூ. 3.25 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் சில்லறை பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாக குறைந்திருந்தது. இதற்கு முந்தைய மாதம் 6.77 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் கணக்குபடி அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தைவிட தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது.
விலைவாசி உயர்வை மேலும் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். உலகின் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று கூறினார்.














