மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதற்கு பதிலளித்து அந்த அறிக்கையை சமர்பிக்குமாறு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவின் படி, மின்வாரியம் இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்பு நடத்தியது. இதற்கான அவகாசம் இம்மாதம் 24ம் தேதியுடன் முடிந்தது. தபால், இணையதளம், நேரடியாக என மொத்தம் 4,500 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மின் வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழக மின் வாரியம் 'உதய்' திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் வாயிலாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நிபந்தனை ஆகும். கட்டண திருத்தம் செய்யப்படாவிட்டால், 10 ஆயிரத்து 793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது. எனவே, மின் கட்டணத்தை எட்டு ஆண்டு இடைவெளிக்கு பின் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.