சந்திரயான் 3 திட்டத்திற்கான விண்கலம் முக்கிய பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை, சந்திரயான் 3 விண்கலம் அதிர்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடுமையான அதிர்வுகள் மற்றும் சத்தங்கள் உள்ள சூழலில் விண்கலத்தின் தாங்கு திறன் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ‘சந்திரயான் 3 திட்டத்தில் மிக முக்கிய மைல்கல்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள UR Rao செயற்கைக்கோள் மையத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், சந்திரயான் 3 விண்கலத்தின் மூன்று பாகங்களான பிரபல்ஷன், லேண்டர், ரோவர் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு அதன் தாங்கு திறன் சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.