சபரிமலையில் போக்குவரத்து வசதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சபரிமலையில் மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதல் சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2 நாட்களாக செயல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை நல்ல பலனை கொடுத்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தனி வரிசை அமல்படுத்தப்பட்டதால், தரிசனம் எளிதானது. சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வருவதால் அதிலும் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். தற்போதைய பார்க்கிங் வசதிகள் போதுமானதாக இல்லை. 10 ஆயிரம் வாகனங்கள் வந்து சேரும் போது, போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய வாகன நிறுத்துமிடங்களை உடனே உருவாக்க வேண்டும் என்றனர்.