மதுரை நகரத்தின் பண்பாட்டை சிறப்பிக்கும் விதமாக மாமதுரை விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக விழாவை துவக்கி வைத்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இந்த விழாவில், பல்வேறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரையை பற்றிய பெருமை மிக்க வரலாற்று சம்பவங்களை பட்டியலிட்டார். குறிப்பாக, 2000 ஆண்டு வரலாறு கொண்ட மதுரை நகரம், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியன் ஆண்ட பூமி, தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனை கண்ணகி தட்டிக்கேட்ட மண், நீதியை காக்க உயிரை நீத்த மன்னன் வாழ்ந்த நகரம், கோவில் நகரம், தூங்கா நகரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டார். மேலும், சிலப்பதிகாரத்தில் திங்களை போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று குறிப்பிட்டது போல, மதுரை எம்பி சு வெங்கடேசன், மாமதுரை போற்றுதும் என்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பெருமை தெரிவித்தார்.